மழையால் குடிசை முழுவதுமாக சேதமடைந்தால் ரூ.5,000 நிவாரணம் - அமைச்சர் அறிவிப்பு

 
ramachandran

மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கடலூர் மாவட்ட கடலோர பகுதிகளில் கனமழையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீர்காழியில் கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்ததால், சீர்காழியில் ஆயிரம் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதன் காரணமாக சீர்காழி ஒரு தனி தீவு போல காட்சியளிக்கிறது. இதேபோல் விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், ஒரு சில பகுதிகளில் குடிசை வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. 
இந்நிலையில், மழை பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:- மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும்.

வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் என ஏற்கெனவே விதி உள்ளது. இதேபோல், பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவராணம் வழங்கவும் விதி உள்ளது. மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். தமிழகத்தில் மழை பாதிப்புகளால் கடந்த சில நாட்களில் 2 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்