பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை

 
anbil-mahesh-3

பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் சிலர் திண்பண்டம் வாங்க சென்ற நிலையில், அந்த மாணவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக அந்த கடைக்காரர் திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக  இதுவரை 2பேர் கைது செய்யப்பட்டு, 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஞ்சாகுளத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

anbil

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாநில சுகாதாரத்துறையுடனான ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்