நீட் விலக்கு மசோதா தொடர்பாக விரைவில் மத்திய அரசுக்கு பதில் - மா.சுப்பிரமணியன்

 
ma Subramanian

நீட் விலக்கு மசோதா தொடர்பாக விரைவில் மத்திய அரசுக்கு, தமிழக அரசின் சார்பில் பதில் அனுப்பி வைக்கப்படும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேர நடத்தப்படும் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமலேயே திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து திமுக ஆட்சியில் மீண்டும் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே நடபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது, நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார  அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேள்வி நேரத்தில் தெரிவித்திருந்தார். 

Ma Subramanian

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  சுகாதார அமைச்சகமும், ஆயூஷ் அமைச்சகமும் எழுப்பியுள்ள 6 கேள்விகளுக்கு பதில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இதன்படி, சட்டமன்றத்திற்கு நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் இல்லையென மத்திய அரசு கூறுவது தவறான வாதம் என்றார். தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு மீறுவதாக கூறுவதை ஏற்க முடியாது எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக இருந்துவந்துள்ள புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பார் என்று நம்புவதாகவும் கூறினார்.