பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ma subramanian

பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் தடுப்பூசி பேராயுதமாக விளங்கிறது. தமிழகத்தில் வாரம் ஒருமுறை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் தடுப்பூசி முகாம்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இன்று தமிழகம் முழுவதும் 35வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை தமிழக சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். 

Ma Subramanian

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- இந்திய அளவில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி இன்று 35-வது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள தகுதி உடையவர்களில் சுமார் 15 சதவீதம் பேர்தான் போட்டுள்ளார்கள். பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகிறேன். இந்த மாதம் மட்டும் தான் இலவசமாக போடப்படும். பொதுமக்கள் வசதிக்காக இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் அதாவது 11, 18, 25 ஆகிய தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். இந்த முகாம்கள் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் வழக்கம் போல் தினமும் தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.