மாணவிகளே...ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mk stalin

கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிட துடிக்கும் மாணவிகளுக்கு, ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.9.2022) சென்னை , பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரி பள்ளிகளையும் தொடங்கி வைத்தார். 

Pudhumai pen

இதன் பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதுமைப் பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும், பாலின சமத்துவம் ஏற்படும், குழந்தை திருமணங்கள் குறையும். பெண்கள் அடங்கிபோகத் தேவையில்லை. ரூ.1,000 இலவசமாக வழங்கப்படவில்லை. அது அரசின் கடமை. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை கொண்ட பெண்களே... கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிட துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன். நன்றாக படிக்கும் பெண்கள், திருமணத்திற்கு பின் வீட்டிற்குள் முடங்கும் சூழல் உள்ளது. இது மாற வேண்டும். தந்தைக்குரிய கடமை உணர்வுடன் பேசுகிறேன். மாணவர்களை வளர்த்தெடுக்கவே நானும், அரசும் உள்ளோம். கல்வி எனும் நீரோடை எந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவானதே நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட இயக்க ஆட்சி. என் வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய மகத்தான நாள் இன்று பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கற்றலோடு மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதி என்பது சலுகை அல்ல, அரசின் கடமை. பெண் கல்வி ஊக்குவிக்கப்படும் போது, சமத்துவம் நிலைக்கும். இவ்வாறு கூறினார்.