பாதயாத்திரை என்ற பெயரில் நாட்டை பிளவுப்படுத்த முயற்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு

 
annamalai

பாதயாத்திரை என்ற பெயரில் பிரிவினைவாதிகளை சந்திக்கும் ராகுல் காந்தி நாட்டை மீண்டும் பிளவுபடுத்த முயற்சித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து பேசுகிறார். ஜார்ஜ் பொன்னையா எப்படிப்பட்ட கருத்துகளை கூறிவிட்டு சிறை சென்றவர் என்பது நமக்கு தெரியும். அவர், பிரதமர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். மிகவும் தரம் குறைந்த வார்த்தைகளை பிரதமர் மற்றும் அமித்ஷா குறித்து ஜார்ஜ் பொன்னையா பயன்படுத்தினார்.  ராகுல் யாத்திரை என்பது பாரத் ஜோடோவா அல்லது பாரத் தோடோவா?. பாரத் ஜோடோ என்றால் இந்தியாவை இணைக்கிறேன் என்று பொருள், பாரத் தோடோ என்றால் இந்தியாவை பிரிக்கிறேன் என பொருள். ஜார்ஜ் பொன்னையா போன்றவர்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டியவர்கள். அன்றைக்கே இந்த போராட்டம் தூண்டப்பட்ட போராட்டம் என மன்மோகன் சிங் கூறியுள்ளார். அந்த அமைச்சரவையில் திமுக இடம்பெற்றிருந்தது.

rahul gandhi

பாதயாத்திரையின் போது, நிறைய பிரிவினைவாதிகளை மட்டுமே சந்திப்பதை ராகுல் முதல் நோக்கமாக வைத்துள்ளார். எந்த ஊர் சென்றாலும், அதிகம் பிரிவினைவாதிகளை சந்திப்பதாக தான் ராகுலின் நடவடிக்கைள் உள்ளன. இந்தியாவை சேர்த்து வைக்கும் அளவுக்கு இல்லை.தமிழகத்தில் இருந்து கேரளா சென்றுள்ளார். அடுத்து 6 அல்லது 7 நாட்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை ஊக்குவித்து கொண்டு அவர்களின் அருகில் நிற்பதை பெருமையாக ஸ்டாலின் கருதுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.