அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசு அல்ல, திருப்பி அடிப்பேன் - அண்ணாமலை ஆவேசம்

 
annamalai

தன்னை அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் இயேசு அல்ல, தன்னை அடித்தால் திருப்பி அடிப்பேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  

சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவனின் 307வது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நேற்றே மாமன்னன் பூலித்தேவனுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சரோ விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவிப்பதில்லை. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறையை அறிவித்தது திமுக அரசுதான். அப்போது அண்ணா முதலமைச்சராக இருந்தார். இன்றைக்கு விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காததன் மூலம் திமுக அண்ணாவின் கொள்கைகளில் இருந்து எந்த அளவுக்கு மாறி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

Annamalai

  பாஜக மத அரசியல் செய்கிறது என்று சொல்வதற்கு திமுகவிற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து மதத்திற்கும் வாழ்த்து சொல்லிவிட்டு பாஜகவை மதசார்புள்ள கட்சி என்று சொல்லட்டும்.   இதனை சாமானிய மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? என்னை அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் இயேசு அல்ல; என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன். நான் தன்மானமிக்க அரசியல்வாதி. கண்ணியமாக பேசித்தான் இந்த கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. யாருடைய கைகாலையும் பிடித்து நான் இந்த பதவிக்கு வரவில்லை. எனக்கு பதவியை கொடுத்துள்ளார்கள், பணியை செய்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு கூறினார்.