ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் பாஜகவிற்கு தான் நல்லது - அண்ணாமலை கிண்டல்

 
Annamalai

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டால் அது பாஜகவிற்கு தான் நல்லது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:  பிரதமர் மோடியின் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் பலவும் இந்தியாவுடன் இணைந்துள்ளன.காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மிகப் பெரிய போட்டி நிலவுகிறது. இதற்கு முன் காங்கிரஸ், கட்சி கூட்டத்தில், 'ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு தான் பதவி' என்றனர். ஆனால் சிவகங்கை தொகுதியில் ராஜ்யசபா எம்.பி., பதவியை முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திற்கு தந்துள்ளனர். இதுபற்றி மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறும்போது, இருவரும் தனித்தனி ரேஷன் கார்டு வைத்துள்ளனர் என்கிறார். அது நல்ல வேடிக்கை.

காங்கிரஸ் கட்சி, பேசுவது ஒன்று, செய்வது ஒன்று. கட்சியில் தலைவர் பதவியை கைப்பற்ற, சோனியா, ராகுலை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சுற்றி சுற்றி வருகின்றனர்.காங்கிரஸ் தலைவராக ராகுல் வருவது அக்கட்சிக்கு மட்டுமின்றி, பாஜகவிற்கும் நல்லது தான்.ராகுல் தலைவரானால் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வேலை செய்ய மாட்டார்கள். இதுவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பாக அமையும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்