2ஜி அலைக்கற்றை ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை - அண்ணாமலை

 
annamalai

2ஜி அலைக்கற்றை ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: 5ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் வாயிலாக நாட்டிற்கு  1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதுவே, இதுவரை நடந்த அலைக்கற்றை ஒதுக்கீடுகளில் கிடைத்த வருவாயில் அதிகம்.இந்த ஏலம் வெளிப்படையாக நடந்துள்ளது. மொத்த அலைக்கற்றையும் விற்கப்படவில்லை, பாதி தான் விற்கப்பட்டுள்ளது. சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசில், தி.மு.க.,வை சேர்ந்த ஆ.ராசா, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 2008ல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு, 2001ல் நிர்ணயித்த அடிப்படை விலை வழங்கப்பட்டது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்று ஏலம் விடப்பட்டது. இதற்கு பணப் பரிமாற்றங்கள் நடந்தன.இது போன்ற முறைகேடுகள் எங்கும் நடந்ததில்லை. '2ஜி' அலைக்கற்றை ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

Annamalai

ஆ.ராசா எழுப்பிய குற்றச்சாட்டை ஏன் காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கேட்கவில்லை? தி.மு.க., - எம்.பி., ஒருவர், மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, தன் சகோதரர் நடத்திய, 'டிவி' நிறுவனத்திற்கு முறைகேடாக 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கினார். அவர் தான், நல்ல நிலையில் இருந்த பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை குட்டிச்சுவராக்கினார். மின் துறை ஊழல் தொடர்பாக, நான் தெரிவிக்கும் புகார்களுக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி, என் மீது புகார் அளித்து கைது செய்யட்டும். அவரையும், அவரின் சகோதரரையும் பற்றி முன்பு முதல்வர் ஸ்டாலின் புகார் கூறியிருக்கிறார். தற்போது, செந்தில் பாலாஜி உத்தமர் என்றும், அவரை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறி விட்டால், நான் அவரை பற்றி பேசுவதை நிறுத்தி விடுகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.