திமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது - அண்ணாமலை

 
annamalai

பாஜகவின் கொள்கைக்கு எதிராக பிரிவிணையை பேசும் திமுகவுடன் எந்த காலத்திலும் பாஜக கூட்டணி வைக்காது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: பா.ஜ.க.வின் கொள்கைக்கு எதிராகவே திமுகவினர் பேசி வருகின்றனர். மாநில சுயாட்சி போன்றவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வைத்துக்கொண்டே திமுக முக்கிய தலைவர்கள் பேசி வருகின்றனர். இது பா.ஜ.கவின் கூட்டணிக்கு எதிரானது. அப்படியிருக்கும் சூழலில் எந்த காலகட்டத்திலும் திமுக உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இது கட்சியின் மாநில தலைவரான என்னுடைய கருத்து. தேசிய தலைமையும் இதையே தான் சொல்லப்போகிறார்கள். ஏனெனில் இது கட்சியின் அடிப்படை. அப்படி இருக்கையில் பிரிவினை பேசும் சக்திகளோடு எப்படி பா.ஜ.க கூட்டணி வைக்கும்? யாருடனும் கூட்டணி வைத்து கட்சி வளர வேண்டும் என்ற அவசியம் பா.ஜ.கவுக்கு கிடையாது. நாங்களாக தனித்தன்மையாக வளர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.  

Annamalai

தொடர்ந்து பேசிய அவர், ஒரு லிட்டர் பால் என்பது ஒரு கிலோ எடைக்கு சமமாகவே இருக்கும். ஆனால் அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட் 430 கிராம் தான் இருப்பதான படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. ஆனால் சில புரிதல் இல்லாத திமுகவினர் லிட்டர் அளவும், எடை அளவும் ஒன்று கிடையாது எனக் கூறுகின்றனர். அறிவியல் படி ஏறத்தாழ சமமாகவே இருக்கும். இதனால் ஒவ்வொரு பால் பாக்கெட்டிலும் 60 முதல் 70 கிராம் அளவிற்கு பால் குறைவாக இருந்தால் தமிழகத்தில் ரூ.2 கோடி வருவாய் அரசுக்கு வரவேண்டியது வராமல் இருக்கிறதோ என நேற்றே அறிக்கை வெளியிட்டிருந்தோம். இது அரசின் நம்பிக்கை மீதான கேள்வியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கூறினார்.