அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைதான் நாட்டுக்கு முக்கியமா? - சபாநாயகர் அப்பாவு கேள்வி

 
appavu

அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம், அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 151வது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் வ.உ. சி. திருவுருவ சிலைக்கு  அரசு சார்பில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

ep

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:  அதிமுக விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விசயமல்ல. அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதிமுகவில் பல பிரிவுகளாக அவர்கள் உள்ளனர். எந்த பிரிவு சரி, தவறு என்பது குறித்து நீதிமன்றத்தை அவர்கள் நாடி உள்ளனர். அதற்கு மேல் தேர்தல் ஆணையம் உள்ளது. அதிமுக கொறடா கொடுத்த மனு மீதான நடவடிக்கை சட்டமன்றம் நடக்கும்போது தெரியும். இந்த ஆட்சியில் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக துணைத் தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக நடவடிக்கையின் அடிப்படையில் முடிவுகள் இருக்கும். இவ்வாறு கூறினார்.