ஓ.பன்னீர்செல்வம் அணியில் இயக்குநர் பாக்கியராஜ் ஐக்கியம்

 
ops pakiaraj

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் இணைந்தார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தீர்ப்பு அளித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இவ்வாறு அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்த இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.  சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் அப்போது, அங்கு வந்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், பாக்யராஜ் அதிமுகவில் இணைந்தார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், முன்னாள் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா விட்டு சென்றதைப்போல் மீண்டும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுக பலப்படுத்த வேண்டும். அதற்கு அதிமுகவில் இணைந்து நானும் பங்காற்றவுள்ளேன். தேவை ஏற்பட்டால் நானே நேரில் சென்று அனைவரையும் ஒருங்கிணைக்க பாடுபடுவேன். இவ்வாறு கூறினார்.