திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது....இனிமேலும் மக்கள் நம்பமாட்டார்கள் - ஜி.கே.வாசன் பேச்சு

 
gk vasan

திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஏமாற்று வேலை என மக்களுக்கு தெரிந்துவிட்டது எனவும்,  இனிமேலும் தமிழக மக்கள் திமுகவை நம்பமாட்டார்கள் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து இருந்தார். அதன்படி மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். 

gk vasan

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது: போது அவர் கூறியதாவது:  திமுக அரசு வரலாறு காணாத அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் நல்ல திட்டங்களை எதிர்பார்த்த மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி ஏமாற்று வேலை என தெரிந்துவிட்டது. தற்போது சொத்துவரியை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். கடந்த ஆட்சியின் போது தி.மு.க. சொத்து வரி உயர்த்தியதற்கு பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தியது. தற்போது இரட்டை வேடம் போட்டுக்கொண்டு சொத்துவரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. சொத்து வரி மட்டுமில்லாமல் பால் விலை, குடிநீர் வரி, வீட்டு வரி என அனைத்தையும் ஏற்றியுள்ளது வேதனை அளிக்கிறது. மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கமாக வெளிப்படை தன்மை இல்லாமல் தி.மு.க .அரசு செயல்பட்டு வருகிறது. நீங்கள் எந்த மாடல் பேசினாலும், தமிழக மக்கள் உங்களை நம்பபோவதில்லை. உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. உங்களுடைய உண்மையான முகத்தை மக்கள் தெரிந்து கொண்டனர். இதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறை வாக்குகளால் பிரதிபலிப்பார்கள் என்பதில் மாற்றம் கிடையாது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்

.