தி.மு.க.வை பிரிவினைவாத கட்சி போல சித்தரிக்க நினைத்தார் ஆளுநர் - டி.கே.எஸ்.இளங்கோவன்

 
tks

தி.மு.க.வை பிரிவினைவாத கட்சி மாதிரி சித்தரிக்க ஆளுநர் நினைத்தார், ஆனால் அது எடுபடவில்லை என தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். 
 

தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழை பற்றி உள்ளார்ந்தமாக புரிந்து கொள்ளாமல் யாரோ எழுதி கொடுப்பதை பொது வெளியில் சொல்கிறார். திருக்குறளை தப்பாக மொழி பெயர்த்தனர் என்று ஆரம்பத்தில் பேசி வந்தார். திராவிடம் என்ற வார்த்தை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த வார்த்தை என்ற அர்த்தத்தில் பேசினார். ஆனால் அதற்கு முன்பே திராவிடம் இருக்கிறது. திராவிடம் என்ற வார்த்தையை சங்கராச்சாரியாரே சொல்லி உள்ளார். தி.மு.க.வை பிரிவினைவாத கட்சி மாதிரி சித்தரிக்க ஆளுநர் நினைத்தார். ஆனால் அது எடுபடவில்லை.  

நாங்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை. 1964-ம் ஆண்டே அதை தெளிவுப்படுத்திவிட்டோம். தமிழ்நாடு என்று நாம் சொல்வதால் தனிநாட்டுக்காக போராடும் சக்தியாக தி.மு.க.வை தவறாக சித்தரிக்கலாம் என்ற எண்ணத்தில் தமிழகம் என்ற வார்த்தை தான் பொருத்தமானது என்று ஆளுநர் பேசி இருந்தார். ஆனால் அவர் நினைத்தது வேறு, நடந்தது வேறு. கடைசியில் ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பால் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான விளக்கம் அளித்து விட்டார். டெல்லி மேலிடம் சொன்னதின் பேரிலேயே அவர் அந்த விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு கூறினார்.