ஸ்விகி ஊழியர்கள் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி நடைபயணம்

 
ஸ்விகி ஊழியர்கள் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி நடைபயணம்

பழைய நடைமுறையில் சம்பளம் கொண்டு வர வேண்டுமென ஸ்விகி ஊழியர்கள் பெங்களூர் நோக்கி நடை பயணம் மேற்கொண்டனர். 

தமிழகத்தில் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனமான ஸ்விகியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையிலிருந்து பெங்களூரில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நோக்கி நடை பயணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்விகி ஊழியர்கள் சென்றனர். 


இதுகுறித்து ஸ்விகி ஊழியர் ஒருவர் கூறுகையில், “திங்கட்கிழமை முதல் எங்கள் போராட்டம் தொடர்கிறது. எங்களது சம்பளத்தை புதிய திட்டத்தில் கொண்டு வந்து கொடுக்க முயற்சி செய்கிறார்கள் பழைய முறையில் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை எந்த முடிவும் தெரியவில்ல.  எங்களது தலைமை அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அங்கு சென்று எங்கள் கோரிக்கை வைத்தும் ஏற்கவில்லை. தற்போதுள்ள புதிய முறையில் தான் வேலை பார்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எங்களுக்கு பழைய முறையில் வேலை முறை கொடுக்க வேண்டும். முகம் தெரியாத முதலாளியிடம் வேலை செய்யும் போது பெங்களூரில் உரிமையாளர் இருப்பதாக வந்த தகவலையடுத்து அவரை சந்தித்து சொல்வதற்காக தற்போது நடை பயணமாக பெங்களூர் செல்கின்றோம். பழைய நடை முறையில் காலை 6 மணி முதல் ஒன்பது மணி வரை வேலை செய்யும் போது குறிப்பிட்ட தொகை வரும் தற்போது புதிய நடைமுறையில் பகுதி நேரமாக பார்ப்பவர்களுக்கும், முழு நேரமாக பார்ப்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு இத்தனை உணவு டெலிவரி செய்தால் குறிப்பிட்ட தொகை சம்பளமாக தருவதாக கூறுகின்றனர். இது தங்களுக்கு ஏற்றது போல் இல்லை இதனால் ஊழியர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நிறுவனத்தை விட்டு வெளியேற போகிறோம்” எனக் கூறினார்.