ஏதோ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறான் என்றே என் மனதை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் - கே.வி.ஆனந்த் நினைவுகள் பகிரும் சுரேஷ் சுபா

 
சு

கொரோனா ஊரடங்கு காலத்தில் திரையுலகில் அடுத்தடுத்து பல முக்கிய பிரபலங்கள் மரணமடைந்தனர்.  நடிகர் விவேக்  மாரடைப்பால் மரணம் அடைந்து அதிர்ச்சி கொடுத்திருந்த நிலையில்,  ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்த்(54) கொரோனா பாதித்து அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.   கடந்த ஆண்டு இதே நாளில் அவர் மரணமடைந்தார்.

 குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரைக் கொண்ட கே. வி. ஆனந்த் புகைப்பட கலைஞராக இருந்து பின்னர் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இடம் உதவியாளராக கோபுரவாசலிலே, மீரா, தேவர்மகன் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த அனுபவத்தில் 1994 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான தேன்மாவின் கொம்பத்து படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.   முதல் படத்திலேயே அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிடைத்தது.  

க்

இதன் பின்னர் 1996-ஆம் ஆண்டில் கதிர் இயக்கத்தில் தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.  தொடர்ந்து நேருக்குநேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி என்று ஒளிப்பதிவாளராக பிரபலமாக இருந்த கே.வி.ஆனந்த், 2005ஆம் ஆண்டில் கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.   . 2009 ஆம் ஆண்டில் சூர்யாவை வைத்து அயன் படத்தை இயக்கி பிரபல இயக்குநரானார்.  அடுத்து ஜீவாவை வைத்து 2011 ஆம் ஆண்டில் கோ படத்தை இயக்கினார்.  தனுஷை வைத்து அனேகன்,  சூர்யாவை வைத்து இரட்டை வேடத்தில் மாற்றான் படங்களை இயக்கினார்.  2019 ஆம் ஆண்டில் சூர்யாவை வைத்து காப்பான் படத்தை இயக்கினார். விஜய் சேதுபதியை வைத்து கவண் படத்தினை இயக்கியிருந்தார்.

கேவி ஆனந்த் உடன் அவர் புகைப்பட கலைஞராக இருக்கும் போதிலிருந்து அவருடன் பயணித்து வந்த எழுத்தாளர்கள் சுபா,  ஆனந்த் இயக்கிய ஆறு படங்களுக்கு அவருடன் பணி புரிந்திருக்கிறார்கள்.  அந்த வகையில்  ஆனந்த்  மறைந்து ஒரு வருடம் ஆகியிருக்கும் நிலையில்,  அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் சுரேஷ்சுபா.

’’வெளிநாட்டில் ஏதோ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறான் என்றே பன்னிரண்டு மாதங்களாக, இன்றுவரை என் மனதை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன். 
சென்ற வருடம் இதே தேதி. விடியல் நேரம். மடியில் விழுந்த வெடிகுண்டாய் அந்தச் செய்தி. கொடுமையான கோவிட் தொற்று கே. வி. ஆனந்த் மூச்சை நிறுத்திவிட்டது.  பத்தொன்பது வயது பம்பரமாக அறிமுகமாகி, எங்கள் பயணத்தில் நெடுக பங்குகொண்ட ஒரு துடிப்பான நண்பன். ஒற்றை ஸ்டில் கேமிராவும் இரண்டு ஃப்ளாஷ்களும் வைத்துக்கொண்டு, எங்கள் சூப்பர் நாவல் அட்டைப்படங்களுக்காக பல சாகசங்களை நிகழ்த்திக்காட்டி, தமிழகமெங்கும் பெரும் ரசிகர் கூட்டத்தை வளர்த்துக்கொண்டவன். 

திரைப்படங்களில் சாதனைகள் நிகழ்த்திக்கொண்டிருந்த பி.சி. ஸ்ரீராம் பட்டறையில் தன் திறமையைப் பட்டை தீட்டிக்கொண்டவன். ஒளிப்பதிவாளாராகப் பணிபுரிந்த முதல் படத்திலேயே தேசியவிருது பெற்று தன் குருவுக்குப் பெருமை சேர்த்த கலைஞன். 

முழுமையான ஒளிப்பதிவாளராக தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பதினான்கு திரைப்படங்களில் முத்திரை பதித்தவன். தவிர அவனுடைய நட்பு வட்டத்தில் இருந்த இயக்குநர்களுக்காகவும், ஒளிப்பதிவாளர்களுக்காகவும், சில படங்களில் – முக்கியமாக பாடல் காட்சிகளில் – சாகசமான ஒளிப்பதிவு செய்துகொடுத்து, உதவியவன்.  

இயக்குநராக ஏழு தமிழ்த் திரைப்படங்கள். கனா கண்டேன் முதல் கவண் வரை அதில் ஆறு படங்களில் அவனுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். கடைசிப் படமான காப்பானில் நண்பர் பிகேபி அவனுடன் பணியாற்றினார். 

ஸ்டில் கேமிராவைத் தாண்டி, சினிமாவைத் தாண்டி, எங்களுக்குள் இறுகியிருந்த நட்பும், அதன் நேர்த்தியான நினைவுகளும் தனி அத்தியாயங்கள். 
இல்லை.. இன்று கண்ணெதிரே அவன் இல்லை என்பது நிதர்சனம். ஆனால், இருக்கிறான், எங்களுடன் எப்போதும் இருப்பான் என்பது எங்கள் தீர்மானம்.’’