ஜான் சத்யனை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

 
ஜான் சத்தியன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள ஜான் சத்யனை  நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. 

supreme court

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கூடிய கொலிஜியம் வழக்கறிஞர் ஜான் சத்யன் உள்ளிட்ட ஐந்து பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. அவர்களில் மூன்று பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நிலையில் ஜான் சத்யன் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்திருந்தது. 

இந்நிலையில் கொலிஜியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 17ம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஜான் சத்யனை நியமிக்க மீண்டும் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதியாக நியமிக்க ஜான் சத்யன் தகுதியான நபர் என முடிவு செய்யப்பட்ட நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்து இணைய தளத்தில் வெளியான செய்தியை பகிர்ந்ததாகவும், மாணவி அனிதா மரணம் குறித்து ஜான் சத்யன் பதிவிட்டதாக மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் அவரின் தனிப்பட்ட முறை குறித்தும் வழக்கறிஞராக அவரது பணி குறித்தும் உளவுத்துறை நல்ல முறையில் அறிக்கை அளித்துள்ளதால் நீதிபதியாக நியமிக்க தகுதியான நபர் என கொலிஜியம் கருதுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜான் சத்யனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.