வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன் - சுப்புலட்சுமி ஜெகதீசன் பேட்டி

 
subbulakshmi

திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்

தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகினார். இதுகுறித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்.  தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின் அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழக பணிகளை மட்டும் செய்து வந்தேன்.  2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் கழகம்  மகத்தான வெற்றி பெற்று. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசு, கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு 29ம் தேதியன்று பதிவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது கடிதத்தை  அனுப்பிவிட்டேன். இவ்வாறு தெரிவித்து இருந்தார். 

subbulakshmi

இந்நிலையில், பதவி விலகியது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சில நாட்களாகவே எனது ராஜினாமா குறித்து ஒவ்வொரு தகவல்கள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். அதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகியதாக கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதியே கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்துள்ளேன். நான் பெரியார் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு உள்ளேன். வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே விலகினேன். ஓய்வுபெற தேவையில்லை என்றால் தொடர்ந்து தி.மு.க.விலேயே இருந்திருப்பேன். நான் ஏன் வேறு கட்சிக்கு செல்லப்போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.