‘மதுரையில் டைடல் பூங்கா’ - முதலமைச்சரின் அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி., வரவேற்பு..

 
su venkatesan


மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு, அம்மாவட்ட எம்.பி., சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.  

மதுரையில்  ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தை 2030ம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டதாக மாற்றும் நோக்கில் இயங்கி வருவதாக தெரிவித்தார். அத்துடன்  மதுரை மாவட்டத்தில் 2வது  டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்’( தொழில்நுட்ப பூங்கா)  அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.  

stalin

மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதற்கட்டமாக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம்   10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். மேலும்,  முதற்கட்டமாக ₹600 கோடி மதிப்பில் 5 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மதுரையில் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா” அமைக்கப்படும் என்கிற தமிழக முதலமைச்சரின்  அறிவிப்புக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பு
தென் தமிழகத்தில் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான வித்து.” என்று கூறியுள்ளார்.