95% பணிகள் நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? - சு.வெங்கடேசன் கேள்வி

 
su venkatesan

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியபடி, 95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் எங்கே? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம்தாகூர் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மதுரை மற்றும் காரைக்குடியில் பாஜக சார்பில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக நேற்று  மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் விராகனூர் சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற பல்துறை தொழில் வல்லுனர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறினார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும், அதற்காக 633.17 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். 


இந்நிலையில்,பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியபடி, 95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் எங்கே? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம்தாகூர் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம்தாகூர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம். பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக்கம் தாக்கூரும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலைப்போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.