எஸ்.பி.ஐ வங்கி அலுவலகத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., உள்ளிருப்பு போராட்டம்..

 
எஸ்.பி.ஐ வங்கி அலுவலகத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., உள்ளிருப்பு போராட்டம்.. 


பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் ஸ்டேட் வங்கி முதன்மைத் தேர்வை தள்ளி வைக்கக்கோரி, நுங்கம்பாக்கம் வங்கிக்கிளையில் நாடாமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.  

பாரத் ஸ்டேட் வங்கியில்  5008 காலிப் பணியிடங்கள் கொண்ட  க்ளெர்க் பணிக்கான முதல்நிலைத் தேர்வு அண்மையில் நடந்து முடிந்தது. இதில்  தமிழகத்தில் மட்டும்  355 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான  அடுத்தகட்ட முதன்மைத் தேர்வு வருகின்ற 15ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  தைப்பொங்கல் திருநாளான அன்று முதன்மைத் தேர்வை அறிவித்துள்ளதற்குத் தேர்வர்கள் பலரும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தனர். அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், தமிழ்ச்சி தங்கபாண்டியன்,  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்,  

எஸ்.பி.ஐ வங்கி அலுவலகத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., உள்ளிருப்பு போராட்டம்.. 

 ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனையடுத்து  எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு தேதியை மாற்ற வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் உள்பட  100க்கும் மேற்பட்டோர்,  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி வட்டார அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து  தொடர்ந்து வங்கி அதிகாரிகள் சு.வெங்கடேசன் எம்.பி ஐ பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன்பின்னர் எம்.பி சு. வெங்கடேசன், சி.பி.எம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா, வட சென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தரராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு சென்றனர்.   எஸ்.பி.ஐ வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன்  சந்தித்த பிறகு,  அறையில் அமர்ந்து கோரிக்கை வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.