ஆளுநரை கண்டித்து களத்தில் இறங்கிய மாணவர்கள் - த.பெ.தி.க.வினர் உருவப்பொம்மை எரித்ததால் பரபரப்பு!

 
tn

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பதவி ஏற்றதில் இருந்தே மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறார்.  அத்துடன் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியானது என்று அண்மையில் ஆளுநர் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.  

tn

இந்த சூழலில் நேற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சமூக நீதி ,சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ,சமத்துவம் ,பெண்ணுரிமை ,மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார் ,அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ,பேரறிஞர் அண்ணா ,முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை வேண்டும் என்று ஆளுநர் தவிர்த்து உரையை  வாசித்தார்.  

tn

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.  அத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தை ஆளுநர் முன்னிலையே தெரியப்படுத்திய நிலையில் ஆளுநர் அவையில் இருந்து பாதியிலேயே கிளம்பினார்.  அத்துடன் ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.

”தமிழ்நாட்டை விட்டு  வெளியேறு வெளியேறு”.. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வெகுண்டெழுந்த மாணவர்கள்!

இந்நிலையில் தமிழக முழுவதும் GetOutRavi என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ஆளுநருக்கு எதிரான தங்களது எதிர்ப்புகள் தமிழ்நாடு மக்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  அத்துடன் கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர் . ஆவடியில் உள்ள இந்து கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டு ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தினர் . அதேபோல சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் வாழ்க தமிழ் ,பெரியார் ,அம்பேத்கர், அண்ணா என முழக்கமிட்டனர். குறிப்பாக தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என்று கூறியதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் எனக் கூறி ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன்  ஆளுநரின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.