பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை - அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!

 
tn

சில்லாங்குளத்தில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று  அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

ttn

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சில்லாங்குளத்தில் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் தங்களுக்கு தெளிவான தகவல் அளிக்கப்படவில்லை என மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் சடலத்தை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Geetha jeevan

இந்நிலையில் பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சில்லாங்குளம் தனியார் பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்  உள்ளிட்டோரும் ஆய்வில் கலந்து கொண்டனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய  நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன்,  பள்ளி மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும். மாணவியின் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.