தி.மு.க. பேச்சாளர் சிவாஜிகிருஷ்ணமூர்த்தி நடவடிக்கை தேவை - ஜி.கே. வாசன்

 
tn

தமிழக முதல்வர் அவர்கள், நாகரீகமற்ற முறையில் பேசிய தி.மு.க பேச்சாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,எம்.பி.யுமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க. பேச்சாளர்  சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களைப் பற்றியும், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றியும் பேசிய தரக்குறைவான பேச்சு மிக மிக கண்டிக்கத்தக்கது.ஏற்கனவே தி.மு.க வைச் சேர்ந்த ஒருவர், பா.ஜ.க வின் மகளிர் அணியின் பெண்களைப் பற்றி தவறாகப் பேசியது அனைவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து தி.மு.க வின் கூட்டத்திற்கு காவலுக்கு வந்த 2 மகளிர் காவலர்களிடம் தி.மு.க வைச் சேர்ந்தவர்கள் தவறாக நடந்து கொண்டது அனைவரும் தெரிந்ததே. நேற்று முன்தினம் சென்னை, பொதுக்கூட்டத்தில் தி.மு.க பேச்சாளர் ஒருவர் பேசிய போது, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் பேசியது அநாகரீகத்தின் உச்சக்கட்டமாகும். அவரது பேச்சிலே தீவிரவாதத்திற்கும், கொலை மிரட்டலுக்கும் இடம் இருப்பதால் சட்டம் ஒழுங்குக்கே பாதகம்.

ttn

தி.மு.க நிர்வாகி பொதுக்கூட்டத்தில் பேசிய தகாத வார்த்தைகள், மோசமான விமர்சனங்கள் எல்லாம் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் மூலம் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் தமிழக அரசுக்கும், தி.மு.க வுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க வினரால் இது போன்ற சட்டம் ஒழுங்குக்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் நடைபெறும் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இது போன்ற மிகவும் மோசமான செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்காமல் இருக்க முதலில் நாகரீகமற்ற முறையில் பேசிய அவரது கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுவாக அனைத்து அரசியல் கட்சியினரும் மேடையில் பேசும்போது அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். அரசியல் நாகரீகம் கருதி சரி, தவறு என்று பேசும் போது அவதூறாக, மோசமாக விமர்சிப்பது சரியல்ல. அதை மக்கள் நிராகரிப்பார்கள்.

rn ravi

எனவே தமிழக முதல்வர் அவர்கள், தி.மு.க வினர் எவரும் நாகரீகமான பேச்சு, தகாத விமர்சனங்கள், தவறான செயல்பாடுகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கு மேலும் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.