"பயிர்காப்பீடு செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" - ஜிகே வாசன் வலியுறுத்தல்!!

 
ttn

நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க , அந்தந்த பகுதியில் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் கடும் உழைப்பால் வளைவித்த நெல்மணிகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் , சேமிப்பு கிடங்கு இல்லாமல் மழையில் நனைந்து வீணாவது மிகவும் வருந்ததக்கது . கடந்த வாரம் பெய்த மழையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெடால் கிராமத்தில் உள்ள நேரடி அரசு கொள்முதல் நிலையத்திற்கு , கடுக்கலூர் , கடப்பாக்கம் , தென்னேரிப்பட்டு , ஒத்திவிளாக்கம் , வயலூர் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் அவர்கள் விளைவித்த நெல்லை கொண்டுவந்து விற்பனைக்காக காத்திருக்கும் போது பெய்த மழையால் நனைந்தும் , ஏற்கனவே கொள்முதல் செய்து அடிக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல் முளைத்து பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

paddy

விவசாயிகள் மழை , காற்று வெள்ளம் , பொருளாதார பற்றாக்குறை , உரத்தட்டுப்பாடு என்று பல்வேறு பாதிப்புக்கு இடையில் நடவுசெய்து , நெல்லை விளைவித்து அவற்றை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள் . அப்படி வந்த பிறகு அவற்றை கொள்முதல் செய்வதில் காலதாமதம் , கொள்முதல் செய்த நெல்லை சேமிப்பு கிடங்கிற்கு மாற்றாமல் மழையில் நனையவிடுவது என்று அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மிகவும் பாதிக்கப்படுவது விவசாயிகளும் , பொது மக்களும் தான் . " உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்பர் . இதுதான் ஊருக்கும் , உலகிற்கும் சோறுபோடும் விவசாயிகளின் நிலை , கொள்முதல் செய்த நெல்லை பல இடங்களில் சிமெண்ட் தரைதளம் வசதியும் , குடோண் வசதியும் இல்லாமல் வெட்டவெளில் மூட்டைகளாக அடிக்கி வைத்தும் , மண் தரையில் குவியலாக குவித்து வைத்தும் இருக்கின்றனர் . 

இவை மழை பெய்யும் போது நனைந்து வீணாவது ஆண்டாண்டு காலமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்கதையாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது . இந்த நிலை மாற வேண்டும் . தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் கொள்முதல் நிலையங்களையும் , சேமிப்பு கிடங்குகளையும் அதிகப்படுத்த வேண்டும் . கடந்த ஆண்டு உலக பட்டினி ஆய்வறிக்கையில் உலகில் உள்ள 116 நாடுகளில் இந்தியா 101 வது இடத்தில் உள்ளது . இரவு சாப்பாடு இல்லாமல் வறுமையில் பல்லாயிரம் பேர் உறங்குகின்றனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது . நிலைமை இவ்வாறு இருக்க நாம் உற்பத்தி செய்த நெல் மணிகளை இப்படி வீணாக்கலாமா ? இந்த வருடம் பயிர் காப்பீடு செய்வதற்கு எந்த ஏற்பாடும் அரசு செய்யவில்லை . என்று விவசாயிகளின் தவிக்கின்றனர் . 

govt

தற்பொழுது இடையிடையே பருவம் தவறிய மழையும் , இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டால் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளால் தாங்க முடியாது . ஆகவே மத்திய மாநில அரசுகள் பயிர் காப்பீடு செய்வதற்கு உரிய நேரத்தில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் . இயற்கையால் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து விவசாயிகள் காக்கப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.