"தமிழக முதல்வராக ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல வேண்டும்" - எல். முருகன்

திமுக தலைவராக இல்லாமல் தமிழக முதல்வராக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், " இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல விநாயகர் கடவுள் அனைவருக்கும் நல்ஆசியை தர வேண்டும். அனைவருக்கான வளர்ச்சியை தர வேண்டும் அனைவரும் இணைந்து 2047 ஆம் ஆண்டுக்குள் தேசம் தழுவிய வளர்ச்சியை எட்டுவோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "விநாயகர் சதுர்த்தி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது. பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது அனைவரின் கடமை. திமுக தலைவராக இருக்கும்போது வாழ்த்து சொல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் முதலமைச்சராக இருக்கும்போது வாழ்த்து சொல்லாமல் இருப்பது தவறு. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஸ்டாலின் கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் வாழ்த்துக்களையாவது தெரிவிக்க வேண்டும். முதலமைச்சர் பாகுபாடு இன்றி வாழ்த்து சொல்ல வேண்டும். முதலமைச்சராக இருப்பவர் பிற சமுதாய விழாக்களுக்கு செல்லும் நிலையில் பெரும்பான்மை மக்களின் விழாக்களுக்கும் தாமாக முன்வந்து வாழ்த்து சொல்ல வேண்டும் என்றார். அத்துடன் , தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீரழிந்து விட்டது. யாரும் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை. காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிலை ஏற்பட்டு விட்டது. இப்படி இருக்கும்போது சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதே எனது கவலை. சட்டம் ஒழுங்கை கவனமாக கையாள வேண்டும். மாநில அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.