பாகிஸ்தானை வீழ்த்தி 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இலங்கை

 
SRI

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றது. 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி தொடங்கிய தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று   துபாயில் இறுதி போட்டி  நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹசரங்கா டி சில்வா 36 ரன்னும், தனஞ்செய டி சில்வா 28 ரன்னும் எடுத்தனர். 

sri

இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இலங்கை அணியின் வீரர்கள் பந்து வீச்சில் மிரட்டினர். தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி இறுதியில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 6வது முறையாக கோப்பையை வென்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா அதிகபட்சமாக 7 கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.