தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 7 பேர் கைது!!

 
fisher

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

fisher

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.  நேற்று மாலை கச்சதீவுக்கும் - நெடுந்தீவுக்கும் இடையே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டினர்.  அத்துடன் ராமேஸ்வரம் மீனவர்களின் படகின் மீது ஏறி படகில் இருந்த மீனவர்களை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.  அத்துடன் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீனை பறித்து சென்றதுடன்,  நெடுந்தீவு அருகே மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்த கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

arrest

கைது செய்யப்பட்டு காரைநகர் கடற்படை முகாமுக்கு  அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  மீனவர்கள் அனைவரும் இன்று யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது . இதே போல் நேற்று மீன் பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு  அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையால் விரட்டி அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.