தமிழக காவல்துறைக்கு சிறப்பு அந்தஸ்து.. சென்னையில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட விழா..

 
தமிழ்நாடு காவல்துறை


தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்குதல் விழா நாளை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது.   துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு குடியரசு தலைவரின் கொடியை  வழங்க, அதனை  டிஜிபி சைலேந்திரபாபு பெற்றுக்கொள்கிறார்.

இந்தியாவில் 1856-ல் அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் தான் முதன்முதலில்  காவல் துறை உருவாக்கப்பட்டது.  காவல் துறையில் கைரேகைப் பிரிவு, தடய அறிவியல் பிரிவு, வயர்லெஸ் அமைப்பு, கடலோரக் காவல் படை என்று பல பிரிவுகள் என முதன்முறையாக தொடங்கப்பட்ட பெருமைகளை உள்ளடக்கிய தமிழக காவல்துறை,  இந்திய காவல் துறையின் முன்னோடி எனப்பெயர் பெற்றது. தற்போது தமிழ்நாடு காவல்துறையில், 9 காவல் ஆணயரகங்கள்,  248 காவல் உட்கோட்டங்கள், மாநிலம் முழுவதும் 1,305 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து மற்றும் புலனாய்வு காவல் நிலையங்கள், 27 காவல் துறை புறக்காவல் நிலையங்கள் உள்ளன.  டிஜிபி, ஐஜி, டிஐஜி தொடங்கி இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும்  காவலர்கள் வரை  பல்வேறு துறைவாரியான பிரிவுகளின் கீழ்,  1 லட்சத்து 31 ஆயிரத்து 491  தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றுகின்றனர்.  

தமிழக காவல்துறைக்கு சிறப்பு அந்தஸ்து.. சென்னை நாளை நடைபெறும் பிரம்மாண்ட விழா..

 இப்படியாக பல பெருமைகளைக் கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறைக்கு , குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடியை வழங்கவேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோது கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து  அப்போதைய காங்கிரஸ் அரசு, 2009-ல் அதற்கான ஆணையை பிறப்பித்தது.   தமிழ்நாடு காவல் துறையின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் சில நிர்வாக காரணங்களால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாமல் போக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு அணிவகுப்பு நடத்தி தற்போது  கிடைத்துள்ளது. இந்த சிறப்புக்கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில காவல் துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  

ஸ்டாலின்

தமிழ்நாடு காவல் துறைக்கு  குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடி அந்தஸ்து வழங்கும் விழா, பிரம்மாண்டமான முறையில் நாளை ( 31 ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை )  காலை 9.30 மணிக்கு   சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக தமிழக காவல்துறை சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ‘குடியரசு தலைவர் கொடியை’ துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு  தமிழ்நாடு காவல் துறைக்கு வழங்குகிறார். குடியரசு தலைவர் கொடியை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பெற்று கொள்கிறார்.
   சைலேந்திர பாபு
இந்நிகழ்ச்சியில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், டிஜிபிக்கள், கூடுதல் டிஜிபிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் எஸ்பிக்கள் என காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சிறப்பு அந்தஸ்திற்கு பின்னர்  ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை தங்கள் அணியும் சீருடையில் குடியரசு தலைவரின் கொடி முத்திரையுடன் சீருடை அணிந்து கொள்வர்.  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்துடன் வாய்மையே வெல்லும் என்று பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு காவல் துறையின் சின்னத்தைப் பொருத்தி  உருவாக்கப்பட்டுள்ள  புதிய கொடி முத்திரை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.