சென்னை-பம்பை இடையே சிறப்பு பேருந்துகள் - நவ.17ம் தேதி முதல் இயக்கம்

 
sabarimalai

சென்னை-பம்பை சிறப்பு பேருந்துகள் - நவ.17ம் தேதி முதல் இயக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பம்பை வரை நவம்பர் 17ம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கேரள மாநிலம் பம்பையில் உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதேபோல் தமிழகத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.

sabarimalai bus

 இந்நிலையில் பக்தர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு நவம்பர் 17ம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்தின் கட்டணமாக பெரியவர்களுக்கு 1090 ரூபாயும், சிறியவர்களுக்கு 545 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது.  எனவே இந்த பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் டிக்கெட்டுகளை, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும்,   சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்