ராசிபுரம் அருகே தாய்க்கு கோயில் கட்டிய மகன்கள்!

 
mother

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே நாவல்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி( 82). இவரது மனைவி அலமேலு (72). இவர்களுக்கு, முருகேசன், பச்சமுத்து என்ற மகன்களும், மாரியம்மா, ராஜாமணி, ஜெயக்கொடி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். தந்தை முத்துசாமி ஆரோக்கியமாக உள்ளார்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாய்க்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபடும்  மகன்கள்.!

தாயின் மீது அளவற்ற பாசம் கொண்ட முருகேசன், பச்சமுத்து ஆகிய இருவரும் தாய் இறந்த சோகத்தில் மனம் நொடிந்து போயினர். மன அமைதிக்காக கோவில் கோவிலாக சென்று வந்துள்ளனர். இந்த நிலையில்தான், தாய் இருக்க நாம் ஏன் கோவில், கோவிலாக சுற்ற வேண்டும். மன அமைதிக்காக தான் சுற்றுகிறோம். நம் குல தெய்வம் இருக்கும் இடத்திலேயே தாயிக்கு கோவில் அமைத்தால் என்ன என யோசித்துள்ளனர். இதனை தங்களது சகோதரிகளிடமும் கூறியுள்ளனர். ஒப்புதல் கிடைத்ததால் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து தங்களது தாய்க்கு கோவில் கட்டினர். அதில் அவரது தாயாரின் முக வடிவில் கருங்கல் சிலை அமைத்துள்ளனர். இந்த கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் செய்துள்ளனர்.

தற்போது, தினந்தோறும் தாயின் சிலைக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்து குடும்பத்துடன் வழிபடுகின்றனர்.