ராகுல் காந்தியின் பாத யாத்திரை வெற்றிபெற சோனியா காந்தி வாழ்த்து..

ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாத யாத்திரை வெற்றிபெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை தொடங்கியிருக்கிறார். நாடு முழுவதும் 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் 3, 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார். இதில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் 120 நடைபயணம் மேற்கொள்கின்றனர். இதனை கன்னியாகுமரியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் முக்தா மற்றும் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் நேரில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்தும், ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு நன்றி தெரிவித்தும் செய்து அனுப்பியுள்ளார். அதனை கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி , தமிழில் மொழிபெயர்த்து வாசித்தார். சோனிய காந்தி தனது வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் வணக்கம். நான் தற்போது மேற்கொண்டு வரும் மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, இன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தொடங்க இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ( பாரத் சோடோ யாத்ரா) இந்திய ஒற்றுமை பயண தொடக்க விழாவில் உங்கள் அனைவருடனும், நேரில் கலந்து கொள்ள இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். இந்த யாத்திரை மிகவும் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் எனும் மகத்தான மாபெரும் மக்கள் இயக்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.
நமது இயக்கம் இந்நிகழ்விற்கு பிறகு மிகுந்த புத்துணர்ச்சி பெறும் என்று நான் நம்புகிறேன். இந்திய அரசியலில் இது ஒரு மகத்தான மாற்றத்தை நிகழ்த்தவல்ல ஒரு முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க தருணம். சுமார் 3600 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிகழ உள்ள இந்த பாதை யாத்திரையில் முழுமையாக கலந்து கொண்டு நிறைவு செய்ய போகும் நம் கட்சியின் 120 சகோதர, சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவை தவிர பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான , ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரையில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்வுகளை தவறாமல் நேரலையில் பார்த்த வண்ணம் இந்திய ஒற்றுமை பயணத்தில் உற்சாகத்துடனும், உணர்வு பூர்வமாகவும் பங்கேற்பேன். ஆகவே நாம் அனைவரும் நமது தீர்மானத்தில் ஒற்றுமையாகவும் , உறுதியாகவும், ஒருங்கிணைப்புடனும் முன்னேறி செல்வோம்.. ஜெய்ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்