வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் - ராமதாஸ் வரவேற்பு!!

 
pmk

 மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சேர்க்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ttn

1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள். மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில்  அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி  வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும்! ஐந்து வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சேர்ந்த மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும்!தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சேர்த்து, அவர்களின் ஊட்டச் சத்தை மேம்படுத்த வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.