மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- பெற்றோர் போராட்டத்தால் உடற்கல்வி ஆசிரியர் கைது

 
su

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடற்கல்வி ஆசிரியரை கைது செய்யக்கோரி பெற்றவர்களும் பொதுமக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் கோவை சுகுணாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதன் பின்னர் அதிரடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர் .  

கோவை பாலக்காடு சாலையில் சுகுணாபுரம் பகுதியில் இயங்கி வருகிறது அந்த அரசு உயர்நிலைப்பள்ளி.   300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.  இந்த பள்ளியில் பிரபாகரன் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக இருந்தார்.  இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்தான் இந்த பள்ளிக்கு வந்திருக்கிறார் . 

gu

கோவை  வால்பாறை அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த பிரபாகரன் கடந்த வாரம் தான் சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கிறார்.  ஆனால் பள்ளிக்கு வந்த சில தினங்களிலேயே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார்.

 இதனால் மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் சொல்ல ,  பெற்றோர்கள் நேற்று பள்ளிக்குச் சென்று உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்கள்.  ஆனால் அவர்களின் புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலையில் பெற்றோர்களும் பொதுமக்களும் திரண்டு சென்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தினர்.

50க்கும் மேற்பட்ட போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.   பின்னர் வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்டோர் விரைந்து சென்று பள்ளி தலைமை ஆசிரியர் , சக ஆசிரியர்கள்,  மாணவ- மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் ஆசிரியர் பிரபாகரன் மாணவிகளிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட்டது உறுதியாகி இருக்கிறது.

 பள்ளிக்கு வந்த ஒரு வாரத்திலேயே அதுவும் சில நாட்களிலேயே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அதிகாரிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   இதன் பின்னர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து கோவை சரவணம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த ஆசிரியர் பிரபாகரனை கைது செய்துள்ளனர். அது குறித்து விவரம் தெரிந்ததும் பெற்றோர்கள் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டு சென்றிருக்கிறார்கள்.  இந்த போராட்டத்தால் சுகுணாபுரம் பகுதியில் சில மணி நேரங்கள் பரபரப்பு எனது ஏற்பட்டிருந்தது.