செப். 30க்குள் சொத்துவரியை செலுத்த வேண்டும்.. தவறினால் அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டம்..

 
 வரி கணக்கு தாக்கல்

ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்திற்கான சொத்துவரியை  செப். 30ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம்  தெரிவித்துள்ளது.  

சொத்து வரியும்,  தொழில் வரியும்  சென்னை மாநகராட்சியின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது சொத்துவரி  மூலம் மட்டும்  ரூ.1200 கோடி  வருவாய் கிடைக்கிறது.  அத்துடன் நடப்பு ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதன் மூலம் மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.500 கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது.  செப்டம்பர் மாதத்துடன் முதல் அரையாண்டு நிறைவு பெறுவதால்,  சொத்துவரி வசூலை  வருவாய் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.  இந்த வரி வருவாயைக் கொண்டு   மாநகராட்சி மூலம்  பல்வேறு திட்டங்கள், பணிகள் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆகையால்  சொத்து வரி செலுத்த தகுதியுடைய  12.5 லட்சம் உரிமையாளர்களுக்கும்,  உயர்த்தப்பட்ட சொத்து வரி  நோட்டீஸ் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.  

சென்னை மாநகராட்சி

ஆனால்  சென்னையில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 52 %  மட்டுமே இதுவரை சொத்துவரி செலுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   செப்டம்பர் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த தவறும் நபர்களுக்கு  மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் தோராயமாக,  13 லட்சம் சொத்துக்களுக்கு வரி செலுத்தப்பட வேண்டிய நிலையில், இதுவரை 6 லட்சத்து 88 ஆயிரம் சொத்துக்களுக்கு மட்டுமே வரி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள்  கூறுகின்றனர்.  

வரி

இன்னும்  ஒரு வாரம் மட்டுமே வரி செலுத்த கால அவகாசம்  இருக்கும் நிலையில், அதற்குள் மீதமுள்ளவர்கள் வரிசெலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  அவ்வாறு செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும்  மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் அரையாண்டில் சொத்து வரியாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.  570 கோடி  வசூல் செய்திருப்பதாகவும்,   இந்த முதல் அரையாண்டில் சொத்து வரி செலுத்தியோர் எண்ணிக்கை 75 % தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக  சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.