தேசிய நெடுஞ்சாலைகளில் 100 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் - அமைச்சர் தகவல்

 
senthil balaji

தேசிய நெடுஞ்சாலைகளில், தமிழக மின்சார வாரியம் சார்பில் முதல் கட்டமாக, 100 மின்சார வாகன 'சார்ஜிங்' மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீலகிரி, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகலுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: கனமழை காரணமாக, நீலகிரியில், 150 டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் காவிரி வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக ஈரோடு, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் 38 டிரான்ஸ்பார்மர்கள் என மொத்தம், 188 டிரான்ஸ்பார்மர்கள் வாயிலாக மின் வினியோகம் செய்யப்படும்,5,392 மின் இணைப்புகளுக்கு மின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியதும், உடனடியாக மின் வினியோகம் வழங்கப்படும். கன மழை, புயல் பாதிப்பு உள்ள இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, மின் சாதனங்களை தரையில் இருந்து உயரத்திற்கு மாற்றுவது உள்ளிட்ட, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  தேசிய நெடுஞ்சாலைகளில், மின் வாரியம் சார்பில் முதல் கட்டமாக, 100 மின்சார வாகன 'சார்ஜிங்' மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
 இவ்வாறு கூறினார்.