இபிஎஸ்ஸை சந்தித்து ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - செல்லூர் ராஜூ

 
sellur raju

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவா்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் எனவும், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர், மதுரை கே.கே.நகா் ரவுண்டானா பகுதியில் உள்ள முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது: எந்த பதவியையும் கேட்காமலேயே என்னை அமைப்புச் செயலராக, கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நியமித்துள்ளார். அவருக்கும், அதிமுகவுக்கும் விசுவாசமாகச் செயல்படுவேன்.
 அதிமுக தொண்டா்கள் புனித இடமாகக் கருதும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு இருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவா்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். பிரிந்து சென்றவா்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்ளவோம். அதிமுகவில் சாதி ரீதியாகப் பதவி வழங்கப்படுவதில்லை.

ops eps

 முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீா்செல்வம், ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. கட்சி யார் பக்கம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தனது செயலுக்கு அவா் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதிமுகவை நம்பியவா்கள் கெட்டதில்லை. நம்பாமல் கெட்டவா்கள் தான் பலர் உள்ளனா். அதிமுகவின் மக்களவை உறுப்பினராக இருக்கும் ரவீந்திரநாத்தை கட்சியிலிருந்து நீக்கியதால், அதிமுகவுக்கு எந்தவித இழப்பும் இல்லை. மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலம் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. தொண்டா்களின் பலம் தான் அதிமுக. இவ்வாறு கூறினார்.