சாதி வெறியாட்டங்களுக்கும், படுகொலைகளுக்கும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுகட்ட வேண்டும்- சீமான்

 
seeman

ஆதிக்குடியான கோனார் சமூகத்தைக் குறிவைத்து தென்மாவட்டங்களில் நடத்தப்படுகிற சாதிவெறியாட்டங்களுக்கும், படுகொலைகளுக்கும் கடும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுகட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Seeman

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்ப்பேரினத்தின் மூத்தக்குடிகளுள் ஒன்றாக இருக்கிற கோனார் சமூகத்தைக் குறிவைத்து தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடத்தப்பட்டு வரும் வன்முறை வெறியாட்டங்களும், படுகொலை போன்ற கோர நிகழ்வுகளும் பெருங்கவலையைத் தருகின்றன. சாதியக்கட்டமைப்பும், வன்முறைக்கொடுமைகளும் ஒட்டுமொத்த சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையுமே முற்றாகக் கெடுத்துக் கொண்டிருக்கையில், சாதியத்தின் பெயராலேயே நடக்கும் இத்தகைய கொடும் வன்முறைகள் தமிழ்த்தேசியத்தின் ஓர்மைக்குத் தீங்கு விளைவிக்கும் பேராபத்தாகும். அதற்கு எனது கடும் கண்டனத்தையும், வன்மையான எதிர்ப்புணர்வையும் பதிவுசெய்கிறேன்.

கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற தொன்ம வாழ்வியல் நாகரீகங்களின் ஆய்வுகளை உலகத்தார் கண்டு, தமிழர்களின் தொன்மையையும், பெருமைகளையையும் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற தற்காலத்தில், தமிழர்கள் சாதியால் பிளவுபட்டு மோதிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது ஏற்கவே முடியாத வரலாற்றுப் பெருந்துயரமாகும். தமிழ்ச்சமூகங்களிடையே நிகழும் சாதிய மோதல்களும், உள்முரண்களும் ஒட்டுமொத்த இனமக்களையே வெட்கித் தலைகுனியச் செய்துவிடுகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று உலகத்திற்கே உயிர்மநேயத்தைப் போதித்த மேன்மை நிறைந்த தமிழ்ச்சமூக மக்களிடையே நிகழும் இதுபோன்ற ஒற்றுமையின்மை நிகழ்வுகளும், பிளவுகளும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே நம்மை இழுத்துச்செல்கின்றன என்பது மறுக்கவியலா பேருண்மையாகும். 

seeman

மூவேந்தர்களது ஆட்சிக்காலம் தொட்டு, தற்கால அரசியல்காலம் வரை சொந்த இரத்தங்களுக்குள்ளே யுத்தம் செய்ததாலேயே தமிழர்கள் வீழ்ந்தார்கள் என்பதே இந்த இனத்தின் வரலாறாகும். அதனை இளைய தலைமுறை தமிழ்ப்பிள்ளைகள் இனியாவது உணர்ந்து புரிந்துகொண்டு சாதி மத உணர்வுகளைப் புறந்தள்ளி, தமிழர் எனும் உணர்வோடு தமிழ்த்தேசிய ஓர்மையைக் கட்டமைக்கவும், உழைக்கும் ஆதித்தமிழ்க்குடிகளின் உயர்வுக்குப் பாடுபடவும் முன்வர வேண்டும். மேலும், சாதியத்தின் பெயராலும், வன்முறை வெறியாட்டங்களினாலும் சமூக ஒற்றுமையைக் குலைக்க முயல்வோர் எவராயினும் அவர்கள் மீது கடும் சட்டநடவடிக்கை எடுத்து, சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.

ஆகவே, தென்மாவட்டங்களில் கோனார் சமூகத்தின் மீது தொடுக்கப்படும் வன்முறை வெறியாட்டங்களுக்கும், படுகொலைகளுக்கும் முடிவுகட்ட கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.