மைசூரில் மீதமுள்ள 45,000 தமிழ்க் கல்வெட்டுகளை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- சீமான்

 
Seeman

மைசூரில் மீதமுள்ள 45,000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

NTK chief Seeman accuses DMK of kidnap || NTK chief Seeman accuses DMK of  kidnap

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் இதுவரை 20,000 கல்வெட்டுகள் மட்டுமே தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது சற்று ஆறுதல் அளித்தாலும், கல்வெட்டுகளை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வினைப் போக்கி, மீதமுள்ள கல்வெட்டுகளையும் தமிழகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஏறத்தாழ 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60,000க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகளேயாகும். தமிழர்களின் அரசியல், ஆட்சிமுறை, வரலாறு, போர் வெற்றிகள், பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல் ஆகிய அனைத்திற்கும் சான்றாகவும் கல்வெட்டுகள் திகழ்கின்றன. தமிழ் முன்னோர்கள் தங்கள் வாழ்வியலை வருங்காலச் சந்ததியினருக்கு கடத்தும் உயரிய நோக்கத்தோடு, அன்னைத் தமிழ் எழுத்துக்கள் கொண்டு செதுக்கிய வரலாற்றுப் பதிவுகளாகிய சிறப்புமிக்க தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தும் தொடக்கத்தில் சென்னையிலும், பின்பு உதகமண்டலத்திலும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த 1966-ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசால் கர்நாடக மாநிலம் மைசூருக்கு தமிழ்க் கல்வெட்டுகள் அத்துமீறிக் கொண்டு செல்லப்பட்டன. அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தும் முறையாகப் பாராமரிக்கப்படாததால் கடந்த 56 ஆண்டுகளாக மெல்ல மெல்ல சிதைந்து அழிந்து வருகின்றன.

அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழக் கல்வெட்டுகளை மீட்கும் பொருட்டு தமிழ்ப்பற்றாளர்களால் தொடரப்பட்ட பொதுநல வழக்கினை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை 2021ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தையும் தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின்படி கடந்த ஓராண்டு காலத்தில் இதுவரை எத்தனை கல்வெட்டுகள் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அறிய நாம் தமிழர் கட்சியின் - தமிழ் மீட்சிப் பாசறையும், வழக்குரைஞர் அறிவன் சீனிவாசன் அவர்களும் இணைந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தனர். அதன் மூலம் தற்போது மைசூரில் இருக்கும் 65000 கல்வெட்டுகளில் 20000 கல்வெட்டுப் படிகள் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், தொல்லியல் துறைக்கும், பொதுநல வழக்கினை தொடர்ந்த வழக்குரைஞர் பெருமக்களுக்கும், நல்லதோர் தீர்ப்பினை அளித்த மதுரை உயர்நீதிமன்றக்கிளைக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Actor, Director, and Naam Tamilar Katchi leader Seeman flays NIA, ED action  on PFI - Social News XYZ

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் மைசூரிலிருந்து விரைந்து தமிழ்நாட்டிற்கு மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். அத்தோடு, தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தையும் உயர்தர அரங்கமைத்துப் பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தி வைப்பதோடு, ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் படியெடுத்து இணையத்தில் எளிதாகக் கிடைக்கவும் வழிவகைச் செய்ய வேண்டும்.

மேலும், உயர்நீதிமன்ற ஆணையின்படி தமிழ்க் கல்வெட்டுகளை திராவிடக் கல்வெட்டுகள் என்று கூறாமல், இனியாவது தமிழ்க் கல்வெட்டுகள் என்றே ஆவணப்படுத்த வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.