பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலை என்னை வாட்டி வதைக்கிறது- சீமான்

 
seeman

பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Seeman Is The Rising Star Of Tamil Politics, Making The Campaign Colourful

திருவண்ணாமலை மாவட்டம் கெங்கை சூடாமணி கிராமத்தில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த 4 வயது குழந்தை பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் என்பவரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் 4 வயது பெண்குழந்தை அரசுப்பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தாய்வழிச்சமூகமாக விளங்கிப் பெண்களுக்கு முதன்மைத்துவம் வழங்கிப் போற்றிக்கொண்டாடிய தமிழ்ச்சமூகத்தில், பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிற இன்றைய கொடும் நிலை கண்டு வெட்கித்தலைகுனிகிறேன்.

குற்றச்சமூகமாக மாறிப்போன இச்சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலை என்னை வாட்டி வதைக்கிறது. பெண்களைப் போகப் பொருளாகக் காட்சிப்படுத்தும் திரைப்படங்கள், ஊடகங்கள், விளம்பரங்கள் முதல் கல்விமுறை, ஆண் பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள் வரை எல்லாவற்றிலும் மாற்றம் உருப் பெற வழிவகை செய்வதே இக்கொடுமைகளிலிருந்து நீங்குவதற்கான வழியாக அமையும். அரிதினும் அரிதான வழக்குகளில் வழங்கப்படும் மரணத்தண்டனையை பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கான தண்டனையாக வரையறுத்து, அதற்கென தனிச்சட்டமியற்றி, தண்டனைகளைக் கடுமை யாக்குவதே இக்குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான ஒரே வாய்ப்பாகும். ஆகவே, இக்குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியரான காமராஜை நிரந்தரப் பணி நீக்கம் செய்து, கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு தகுந்த மருத்துவச் சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் அளித்து, மீண்டுவர அரசு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.