மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பள்ளி வேன் - பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்!!

 
tn

கோவில்பட்டியில்  இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் தனியார் பள்ளி வேன் ஒன்று நீரில் சிக்கி கொண்டது. 

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று  கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மாலை 3:30 மணியிலிருந்து 5 மணி வரை தொடர் மழை பெய்தது.  இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.  மாதாங்கோவில் தெரு, தெற்கு பஜார், மந்தித்தோப்பு சாலை, புதுரோடு ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் அங்குள்ள ரயில்வே சுரங்க பாதைகள் குளம் போல்  காட்சியளித்தன. 

Rain
குறிப்பாக இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர். இந்நிலையில்  இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று  மாலை பள்ளி முடிந்து மாணவ - மாணவிகளை அழைத்து  வந்த தனியார் பள்ளி வேன்  நீரில் சிக்கிக் கொண்டது.  இதையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் உடனடியாக விரைந்து சென்று வேனில்  இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். அத்துடன் அவ்வழியே வாகனங்கள் செல்லவும்  தடை விதிக்கப்பட்டது.

சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் சிறு மழை பெய்தாலே அங்கு வெள்ளநீர்தேங்கும் சூழல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பருவமழை  நெருங்கும் நிலையில்  விரைந்து சுரங்கப்பாதை பணிகளை முடிக்க வேண்டும் என்று அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்