7 நாட்களில் சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்த தங்கம் விலை... இன்று ஒரே நாளில் ரூ. 304 அதிகரிப்பு..

 
தங்கம் விலை


கடந்த 7 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1,400 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.  இந்நிலையில்  இன்று ஒரே நாளில் ரூ.304 வரை தங்கம் விலை அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலையில்  சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்வது வாடிக்கையான ஒன்றுதான்.  இந்த நிலையில் இம்மாத  தொடக்கத்தில் மத்திய அரசு, தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதன்பிறகு தொடர்ந்து  தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது.  இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட ஒரு வார காலத்தில்  மட்டும், தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 1000  வரை அதிகரித்தது  குறிப்பிடத்தக்கது.  இதன் தொடர்ச்சியாக  22 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் தங்கம் விலை  நேற்று மீண்டும் ரூ. 38 ஆயிர்த்தை தாண்டியது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

இந்நிலையில்,  கடந்த 21ம் தேதியன்று  ஒரு கிராம் தங்கம் ரூ.4,630க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி சனிக்கிழமையன்று தங்கம் விலை ரூ. 128  உயர்ந்து, ரூ.37,568க்கும்,   25ம் தேதி  சவரனுக்கு  ரூ.192  உயர்ந்து ரூ.37,760க்கும், 26ம் தேதி ரூ.37,824 ஆகவும் விலை உயர்ந்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சற்று விலை உயர்ந்த நிலையில் , நேற்றைய தினம்  சவரனுக்கு  ரூ.256 உயர்ந்து, சவரன் ரூ.38,136க்கு விற்கப்பட்டது.  இந்நிலையில் இன்றும் தங்கம் விலை  அதிரடியாக அதிகரித்திருக்கிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்  விலை நிலவரம்

சென்னையில் இன்று தங்கம் விலை  கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து , ஒரு கிராம் ரூ.4,805க்கும், சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38, 440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  தொடர்ச்சியாக கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 வரை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இன்று வெள்ளி விலையும் உயர்வைக் கண்டிருக்கிறது.  சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையான நிலையில்,  இன்று ரூ.1.10 உயர்ந்துள்ளது.  அதன்படி சில்லறை விற்பனையில் ஒரு  கிராம் வெள்ளி   ரூ.62.30 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 62,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.