நடிகர்களை ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள் - சத்யராஜ்..

 
sathyaraj

நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என நடிகர்  சத்யராஜ் கூறியது வைரலாகி வருகிறது. 

ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சத்யராஜ் , "தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை மற்றும் உறவு சிக்கல். அதாவது கணவன்-மனைவிக்குள்ளும், தந்தை-மகனுக்குள் ஏற்படும் பிரச்சினைகள். பல விதமான மூட நம்பிக்கைகளால் ஏற்படுகிற மன அழுத்தம். அதேபோல் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் போன்றவையால் ஏற்படுகிற மன அழுத்தம். மேலும், மனநலம் பாதித்த சமூகம் தரும் மன அழுத்தம், பெண் அடிமைத்தனத்தால் ஏற்படுகிற அழுத்தம் போன்றவை ஆகும். இதில், பொருளாதார சிக்கல் என்பது முக்கியமான இடத்தை வகிக்கிறது.

சத்யராஜ்

நீட் தேர்வு சம்பந்தமாக நடந்த தற்கொலை நிகழ்வு மிகவும் மனதைக் காயப்படுத்திய விஷயம். நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு நீட்தேர்வு என்பது கஷ்டம். ஒரு முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்குவது ரொம்ப முக்கியம். டாக்டர், வழக்கறிஞர்களின் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்கத் தெரியாத பெற்றோரின் குழந்தைகள் அவர்கள் படித்து முன்னுக்கு கொண்டுவருவது மிகவும் முக்கியம்.

உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆனால், மனநலம் குன்றினால் மட்டும் மருத்துவர்களிடம் செல்வதில்லை. உலகில் யாரும் புத்திசாலி இல்லை. தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், எம்ஜிஆரின் பாடல் கேட்பேன். அதன்மூலம் நிறைய தெளிவு கிடைக்கும்.

நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ 

பெரியார், அம்பேத்கர் சமூக மருத்துவர்கள் மட்டும் அல்ல சிறந்த மன நல மருத்துவர்கள். நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. நடிகர்களை ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைத்துக்கொள்ளாதீர்கள். நாங்கள் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல. படத்தைப் பாருங்கள். தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள்" என்று கூறினார்..