அதிமுக விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - சத்யபிரதா சாகு விளக்கம்

 
eps and sahu

அ.திமு.க விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் செயல்பட முடியும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை அவர் கூறியதாவது: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் . இதில் 3 கோடியே  4 லட்சம் ஆண்களும்,  3  கோடியே  15 லட்சம் பெண்கள் மற்றும் 8027 மூன்றாம் பாலின வாக்காளர்களும் அடங்கியுள்ளனர். நவம்பர் 9ம் தேதி வரைவு பட்டியல் வெளியான நிலையில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சிறிய தொகுதியான சென்னை துறைமுகம் தொகுதியில் 1.7 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதில் பெறலாம். இவ்வாறு கூறினார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தேர்தல் ஆணையத்தில் கொடுத்த முகவரியின் அடிப்படையிலேயே அ.தி.மு.க.வுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியின் அடிப்படையில் கடிதம் அனுப்பப்பட்டது. தேர்தல் ஆணையம் கொடுத்த முகவரியின் அடிப்படையிலேயே அதிமுகவிற்கு மெசஞ்சர் மூலமாகவும் தபால் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த தகவலையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டோம். அ.திமு.க விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் செயல்பட முடியும். அதன் பிறகு தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை இவ்வாறு அவர் கூறினார்.