தமிழகத்திலும் சத்துணவில் சிக்கன் கறி! முதல்வர் ஸ்டாலின் அதிரடி! சைவ மாணவர்களுக்கு பருவ கால பழங்கள்

 
v

தமிழகத்திலும் சத்துணவில் வாரம் ஒருநாள் சிக்கன் கறி வழங்க முதல்வர் ஸ்டாலின்ஆலோசனை நடத்தி வருகிறார்.    சைவ மாணவர்களுக்கு பருவ கால பழங்கள் வழங்கவும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்காக அமைச்சர்கள் பிராய்லர் கோழி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்கப்படுகிறது.  இதேபோன்று பல மாநில அரசுகள் பள்ளிகளில் மதிய உணவில் மாணவர்களுக்கு முட்டை வழங்கி வருகின்றன.   13 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் மதிய உணவில் முட்டைகள் வழங்கப்படுகின்றன.  இதில் ஒரு படி மேலே சென்று  மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் மற்றும் பருவ கால பழங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

c

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் மற்றும் பருவ கால பழங்கள் வழங்கப்படும் என்றும்,   ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாலு மாதங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

உருளைக்கிழங்கு, பருப்பு, காய்கறிகள், சோயாபீன், முட்டைகள் உள்ளிட்ட வழக்கமான மெனுவுடன் கூடுதலாக கோழிக்கறி மற்றும் பழங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.    இந்த திட்டத்திற்காக கூடுதலாக 372 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது மேற்குவங்க பள்ளி  கல்வித்துறை.

நிதி பற்றாக்குறையின் காரணமாக இந்த திட்டம் 4 மாதங்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார் மேற்கு வங்க கல்வி அமைச்சர்.  நான்கு மாதங்களுக்கான இந்த திட்டத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்திட அதிக நிதி தேவைப்படும்.   எங்களிடம் அவ்வளவு நிதி இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேற்குவங்க மாநிலத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் சத்துணவுடன் வாரத்தில் ஒரு நாள் சிக்கன் கறி வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.  மூத்த அமைச்சர்கள் உயர் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடந்திருப்பதாக தகவல். 

m

 1962 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த காமராஜர் மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.  1982 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது சத்துணவு திட்டம் என்று அதை விரிவு படுத்தினார்.  கருணாநிதி முதல்வராக இருந்தபோது சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  அதன் பின்னர் கலவை சாதம் ,வேக வைக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை, பச்சை பயிறும் வழங்கப்பட்டு வருகிறது.

 2019 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது  சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அட்சய பாத்திர தொண்டு நிறுவனம் மூலமாக நிறைவேற்றினார்.  மு. க.  ஸ்டாலின் முதல்வராக வந்த பின்னர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் .

இந்த நிலையில் வரும் ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் கறி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்க வைக்கிறார் என்று தகவல்.  இதற்காக பிராய்லர் கோழி பண்ணை உரிமையாளர்களுடன் சில அமைச்சர்கள் பேச்சு நடத்தி வருவதாகவும் தகவல்.  அசைவம் சாப்பிடாத குழந்தைகளுக்கு பருவ கால பழங்கள் வழங்கலாம் என்றும் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார் என்று தகவல்.