இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட தயார் - அதிரடி காட்டும் சரத்குமார்

 
sarathkumar

கட்சி நிர்வாகிகள் விரும்பினால் ஈரோடி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட தயார் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்தது. இதனிடையே காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். அதிமுகவை பொறுத்தவரையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருதரப்பினர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதால் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனிடையே இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைபாடு குறித்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தலைமைக் கழக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார். தேர்தலில் தனித்துப்போட்டியிட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலைக்குள்  அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.