2022-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!.. தமிழில் எழுத்தாளர்கள் ஜி.மீனாட்சி, காளிமுத்துவுக்கு விருது..
தமிழில் சிறுகதை எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கும், எழுத்தாளர் காளி முத்துவுக்கும் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது , சிறந்த எழுத்தாளர்களுக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1957ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்ட சாகித்ய அகாடமி என்னும் அமைப்பு, வழங்கி வருகிறது. 24 இந்திய மொழிகளில் உள்ள சிறுகதை, நாவல் போன்ற இலக்கியம், இலக்கியம் சார்ந்த எழுத்தாக்கங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அதிலும், சாகித்ய அகாடமி யுவ புராஸ்கார் விருது என்பது இலக்கியத்திற்கு சேவை புரியும் இளையோருக்கு வழங்கப்படும் விருதாகும்.

இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் இன்னும் பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளும் இந்த சாகித்ய அகாடமி சார்பில் நடத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், இந்திய மொழியில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கி ஊக்குவிப்பதையும் செய்து வருகிறது. அந்தவகையில், 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழில் இளம் தமிழ் எழுத்தாளர்களுக்கான யுவ புராஸ்கர் விருது, எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் எழுதிய 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்ற கவிதை தொகுப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாகித்ய அகாடமி வழங்கும் சிறுகதைகளுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'மல்லிகாவின் வீடு' எனும் சிறுகதைக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருத்தாளர்களுக்கு ரூ.50,000 ரொக்கத்துடன், விருது வழங்கப்பட உள்ளது.


