நண்பனை இழந்த சோகம்.. குற்ற உணர்ச்சியில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்..

 
நண்பனை இழந்த சோகம்.. குற்ற உணர்ச்சியில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்..

இருசக்கர வாகனத்தில் உடன் பயணித்த நண்பன் உயிரிழந்த நிலையில்,   குற்ற உணர்ச்சியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சீனிவாசன்(20) என்பவர்,  தனியார் கல்லூரியில்  டிப்ளமோ மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும்,  அதே பகுதியைச் சேர்ந்த  கொரியர் சர்வீஸில் வேலை பார்த்து வந்த பிரபு(20) என்பவரும் நண்பர்களாவர்.   நேற்று முன்தினம் மாலை,  இவர்கள் இருவரும்  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது  சீனிவாசனுக்குச் சொந்தமான பைக்கை பிரபு ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது,  கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. இதில்  பின்னால் அமர்ந்து சென்ற சீனிவாசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

accident

ஆனால், பைக்கை ஓட்டிச்சென்ற  பிரபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.  இதனையடுத்து அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   சிகிச்சை பெற்று வந்த பிரபு, நண்பன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துளார். அத்துடன்  கூர்மையான ஆயுதத்தால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், பிரபு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  இதனையடுத்து  உரிய சிகிச்சைக்குப் பின்னர் நேற்று முன்தினமும் நள்ளிரவு வீடு திரும்பிய பிரபு,  நண்பன் சீனிவாசன்  உயிரிழந்த சோகத்திலேயே  இருந்துள்ளார். தான் வாகனத்தை ஓட்டிச்சென்ற நிலையில், உடன் பயணித்த நண்பன் இறந்ததால் பிரபு குற்ற உணர்ச்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.  

suicide
இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டைவிட்டு வெளியே வந்த பிரபு,  வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போலீஸார், பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நண்பன் உயிரிழந்த சோகத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  செஞ்சி பகுதியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.