பேரறிவாளன் விவகாரம்: மே 10க்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு அவகாசம்.. - உச்சநீதிமன்றம் உத்தரவு..

 
 Perarivalan


பேரறிவாளன் விவகாரத்தில், மத்திய அரசு செவ்வாய்கிழமைக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்திருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேர்  கைது செய்யப்பட்டனர்.  சுமார் 32 ஆண்டுகளாக சிறை தண்டனை  அனுபவித்து வரும்  அவர்களை விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் உள்பட  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னதாக எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை பற்றி தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் :  மத்திய அரசு தகவல் !
 
 இதற்கிடையே   தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும்,  தனது விடுதலை தொடர்பான முடிவை ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதாகவும் பேரறிவாளன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து வந்தது. பல மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.   எற்கனவே பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் காலதாமதம் செய்திருப்பது ஏற்புடையதல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

பேரறிவாளன் விவகாரம்:  மே 10க்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு அவகாசம்.. - உச்சநீதிமன்றம் உத்தரவு..

இந்நிலையில் இந்த வழக்கு இன்று   மீண்டும்  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.  மேலும் அரசமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவம் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கை கருதுவதாகவும்,  பேரறிவாளன் விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் கூறினர்.    குடியரசுத் தலைவரோ,  ஆளுநரோ  அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியது தானே என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.  அத்துடன்  பேறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு செவ்வாய் கிழமைக்குள் (மே 10) முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.