தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

 
supreme court

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் சமீப நாட்களுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. 100 யூனிட் மானிய மின்சாரம் தவிர அனைத்து விதமான மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மின்கட்டண உயர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டதற்கு பின்னர் தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. 

இந்த  வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "கடந்த 3 மாதத்துக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்டத்துறையை சேர்ந்த நபர் நியமனம் செய்யப்படவில்லை. எப்போது உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்பது உறுதியாக தெரிய வேண்டும். மேலும் தற்போதைய நிலையில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. 

eb

தமிழ்நாடு அரசு தரப்பில், சட்டத் துறையை சேர்ந்த நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மனுதாரரின் நோக்கம் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தவிர, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்டத்துறை உறுப்பினரை நியமனம் செய்ய வேண்டுவது அல்ல. எனவே மனுதாரரின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் உறுப்பினர் நியமனத்தை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது. தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.